சென்னை: மணல் கொள்ளை தொடர்பான அமலாக்கத்துறை வழக்குக்கு, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அமலாக்கத்துறை மனு ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மணல் கொள்ளை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இ.டியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், அதன் குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை அற்றவை என்றும் தமிழக அரசு தனது பதில்மனுவில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக அமலாக்கத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிடக்கோரி, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், அதன் குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை அற்றவை என்றும் தமிழக அரசு தனது பதில்மனுவில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் தாக்கல் செய்த மனுவில் , தமிழகத்தில் நடந்த சட்ட விரோத மணல் கொள்ளை குறித்து அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யுமாறு டிஜிபிக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு கடிதம் அனுப்பியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணையில், 28 குவாரிகளில் அனுமதியின்றி 987 ஹெக்டேர் பரப்புக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மணலின் மதிப்பு சுமார் ரூ.4,730 கோடி ஆகும். ஆனால், அரசுக்கு ரூ.36.45 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. 15 மணல் குவாரி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.130 கோடி தற்காலிகமாக முடக்கப்பட்டது. எனவே, மணல்கொள்ளை குறித்த தகவல்களின்படி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் முதல் கட்ட வாதங்கள்

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே டி.ஜி.பிக்கு ரகசிய தகவல்கள் அனுப்பி வழக்குப்பதிவு செய்யக் கோரப்பட்டது. இது பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு, அமலாக்கத்துறை தகவல்களை அனுப்பி வழக்குப் பதிவு செய்யச் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாநில போலீசார் தபால்காரர்கள் அல்ல. தமிழகத்தைவிட மற்ற மாநிலங்களில் அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமே அமலாக்கத் துறை கண்களுக்குத் தெரிகிறது. இதேபோன்ற ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது, எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு என கேள்வி எழுப்பப்பட்டதால் அமலாக்கத் துறை வாபஸ் பெற்றது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு 3 வாரங்கள் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

தமிழக அரசின் பதில்மனுவில், அமலாக்கத்துறை தகவல்களைப் பகிர்ந்த காரணத்திற்காகவே வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகள் யூகத்தின் அடிப்படையிலானவை, நம்பகத்தன்மை இல்லாதவை. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மணல் கொள்ளை வழக்கை அமலாக்கத்துறை விசாரித்தது சட்டவிரோதமானது. தவறிழைத்த அமலாக்கத்துறை தனது தவறான நடவடிக்கையை மறைக்கவே நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மணல் குவாரி முறைகேடு: தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம்…

மணல் குவாரி முறைகேடு: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறையில் ஆஜராகின்றனர் 5 மாவட்ட ஆட்சியர்கள்…

அமலாக்கத்துறையினரின் அத்துமீறலுக்கு வேட்டு: அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை