சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 1.1 கோடி பேர் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் பேர் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கோடி பேர் பயணம் செய்த நிலையில், தற்போது மீண்டும் ஒருகோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர்.

சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் 1 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேர் பயணித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது.

சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், அதேபோல் ஆலந்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை 2 வழித்தடங்களிலும் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் மெட்ரொ நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்தவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது . அதன்படி , கடந்த மாதம் மட்டும்,  1 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேர் பயணித்ததாகவும் இவர்களில் 51 லட்சத்து 96 ஆயிரத்து 904 பேர் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி பயணித்ததாகவும், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48 லட்சத்து 34 ஆயிரத்து 214 பேர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.