மதுரை: கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என செய்தியாளர்களிடம் தெரிவித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், அதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்ததுடன், “தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் என்றும் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்.. எங்களிடம் வீடியோ ஆதாரம். தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம். களத்தில் நடந்ததை வீடியோ பதிவு செய்துள்ளோம், நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம், குழந்தைகள், பெண்கள் கூடும் போது பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை, பாதுகாப்பு விவகாரத்தில் காவல்துறை கடமை தவறியுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தார்களா? ஒரே நாள் இரவில் 39 பேருக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி சாத்தியமானது? 6 மணிக்கு மேல் போஸ்ட்மார்டம் செய்தது ஏன்?
போலீஸ் சொல்வது பச்சை பொய். திமுகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்கள். இதனால் இதில் சதி இருக்கிறது.

உயிரிழந்த அனைவரையும் அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூராய்வு செய்யக்கூடாது என்பது விதி. விஜய் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிகளவில் ஆம்புலன்ஸ் வந்ததிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
கரூரில் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். ”
இவ்வாறு கேட்டுக்கொண்டார்.