சிவகங்கை: கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன. இனிமேல் இதுபோன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாத வகையில், தலைமைச்செயலாளரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளேன் என கரூர் சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு காரணம், தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காரணம் என்று புறமுகம், தவெகதான காரணம் என மற்றொருபுரமும் பேசப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோல ஒரு சம்பவம் அரங்கேறக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் சம்பவம் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரூரில் நடந்த துயர நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 14 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து. ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன். அது யோசனைதான். இது போன்று பலர் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்திருப்பார்கள். எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள வேண்டும்.
கரூர் நிகழ்வைப் போன்று துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்!
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.