சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். ஆனால், அவர் கேட்ட இடங்களை வழங்காமல் வேறு இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கி உள்ளனர். இந்த பிரசாரத்தின்போது, திமுக நடத்திய முப்பெரும் விழா கூட்டத்தில் கூடிய கூட்டத்தை விட அதிக அளவில் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் தொடர்ச்சிய மக்கள் சந்திப்பு பிரசாரத்தை நடத்தி வருகிறார். இந்த  வாரம்  சனிக்கிழமை (செப்டம்பர் 27) நாமக்கல், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரது பிரசாரத்துக்கு காவல்துறை தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் அவர்கள் கேட்கும் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுத்து வரும் காவல்துறை, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மட்டுமே அனுமதி வழங்கி வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திமுகவினர், தவெகவையும், அதன் தலைவர் விஜயையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தவெக விஜய், திமுக முப்பெரும் விழா நடைபெற்ற கரூரில்,  மாஸ் காட்ட முடிவு செய்துள்ளார். கடந்த 17ந்தேதி திமுக முப்பெரும் விழா நடத்திய  பகுதியில், பிரசாரம் செய்து,  திமுகவினர்  கூட்டிய கூட்டத்தை விட அதிக கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளார். அதனால், கரூரின் முக்கிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரினார். ஆனால், அவர்கள் கேட்ட எந்தவொரு பகுதியையும் அனுமதிக்காத காவல்துறை, வேறு இடங்களை ஒதுக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணங்களை தொடங்கி உள்ளார். இந்த நிலையில், வரும் நாட்களில் விஜய்யின் பிரச்சார பயண கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நாளை  (செப்டம்பர் 27-ம் தேதி) விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதைத்தொடர்ந்தது, கடந்த 25ந்தேதி  நாமக்கல்லில் பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  ஆய்வு செய்து, காவல்துறையினடம் அனுமதி கோரி மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, கரூர் சென்றவர். அங்குள்ள  லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கரூர்  லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால், காவல்துறை அதை வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து,  புஸ்ஸி ஆனந்த் தலைமையில், கரூர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட த.வெ.க. கட்சி நிர்வாகிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகளுடன் சுமார் 1 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் காவல்துறை அனுமதி மறுத்ததுடன்,  வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள அறிவுறுத்தியது.  இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், காவல்துறை சார்பில் அனுமதி வழங்குவதாக கூறப்படும் வேலுச்சாமிபுரம் பகுதி, நகரை விட்டு வெளியே இருப்பதாகவும், நகர எல்லைக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாகவும்,  விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மாற்று இடத்தை தேர்வு செய்து விட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றார்.

இந்த பரபரப்பான சூழலில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு  11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பேனர்கள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள தவெகவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 17-ம் தேதி கரூர் கோடங்கிப்பட்டியில் திமுக சார்பில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அதற்காக கோடங்கிப்பட்டி மட்டுமில்லாமல் கரூர் மாவட்டம் முழுவதுமே சாலை ஓரங்களில் ஆங்காங்கே திமுக பேனர்கள் வைக்கப்பட்டன. இதனை சுட்டிக் காட்டிய அதிமுக, தவெகவினர்,   தங்களுக்கு மட்டும் பேனர் வைக்க அனுமதி மறுப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் விமர்சித்து வருகின்றனர்.

 கரூரில் விஜய் பிரசாரம் செய்ய தவெக தரப்பில் கோரப்பட்ட லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களையும் ஒதுக்க காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அதற்கு பதிலாக  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் வரும் விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://patrikai.com/they-are-trembling-with-fear-at-the-growing-recognition-we-have-among-the-people-vijays-statement/