சென்னையில் உள்ள மாநிலத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் (SSN) பொறியியல் கல்லூரி, அடுத்த கல்வியாண்டான 2026-27 முதல் படிப்படியாக மூட விண்ணப்பித்துள்ளது.

முதலதரமான இக்கல்லூரி சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அருகிலுள்ள வளாகத்தில் செயல்படும் சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் படிப்படியாக இணைக்கப்பட உள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது.

1996 இல் எச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் மற்றும் கௌரவத் தலைவரான ஷிவ் நாடார் அவர்களால் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி, நிறுவப்பட்டது.

தரமான பொறியியல் கல்வியை வழங்கிவரும் இக்கல்லூரி மாணவர்களில் 95%க்கும் அதிகமானவர்கள் வளாக வேலைவாய்ப்புகளின் மூலம் சிறந்த நிறுவனங்களில் சேர்வதாகக் கூறப்படுகிறது.

பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள காலவாக்கத்தில் 230 ஏக்கர் வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் 2025-26 கல்வியாண்டில் 900 மாணவர்கள் முதலாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த மாணவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகள் படித்த பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியிடமிருந்து படிப்படியாக மூடுவதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் TOI விடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“சிவ் நாடார் பல்கலைக்கழகத்தையும் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியையும் இணைத்து, பலதரப்பட்ட திட்டங்களை வழங்கும் ஒரு உலகத் தரம் வாய்ந்த நிறுவனத்தை உருவாக்க விரும்பினோம்,” என்று எஸ்எஸ்என் நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தன்னாட்சி கல்லூரியாக இயங்கிவரும் SSN பொறியியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் 65% இடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 55,000 கல்விக் கட்டணமாக செலுத்துகின்றனர்.

“ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட உள்ள SSN பொறியியல் கல்லூரி இனி, எஸ்எஸ்என் பொறியியல் பள்ளி என்று அழைக்கப்படும்.

இந்த நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை பெற நுழைவுத் தேர்வை எழுதி நேர்காணலில் தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும் சேர்க்கை செயல்முறை மற்றும் கட்டண அமைப்பு ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப இருக்கும்” என்று அக்கல்வி நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கல்வியாண்டிலிருந்து சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் BTech மற்றும் MTech படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்தும். சிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பிடெக் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் ரூ. 3.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், “மாநில அரசிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்ற பிறகே கல்லூரியை மூடுவதற்கு பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கும்” என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாக TOI தெரிவித்துள்ளது.