செப்டம்பர் 17 இன்று திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாள். பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். முன்னதாக பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அந்தவகையில் சுயமரியாதை, ஆளுமை திறன், பகுத்தறிவு பார்வை கொண்டதாக செயல்பாடுகள் அமையும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.  திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின்,  சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் கொள்கைகளுக்காக ஒப்படைப்பேன் என  உறுதிமொழியை வாசிக்க, அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு ஊழியர்கள் என 200க்கும் அதிகமானவர்கள  உறுதி மொழி ஏற்றனர்.

முன்னதாக பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட,  ஏஐ தொழிநுட்ப வீடியோவுடன்   வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில், ‘தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்!’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி, திருச்சியில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் நேரு உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.

இன்று மாலை கரூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.