கரூர்: நடப்பாண்டு திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த விழா தமிழக  அரசியல் வரலாற்றில்  இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக  நடைபெறும்  என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் செப். 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப். 17 பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக உருவான நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு முப்பெரும் விழா வரும் செப்.17-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த நிகழ்வு கரூரில் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், கழக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகள், உடன்பிறப்புகள் என அனைவரும் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் கழக மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளது.

இதற்காக  கரூர் – திருச்சி சாலையில் உள்ள கோடங்கிபட்டி என்ற இடத்தில் 50 ஏக்கர் பரப்பளவில்  இடம் பார்க்கப்பட்டு, அங்கு திமுக முப்பெரும் விழா நடைபெறுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  இந்த விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டின் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா அமையும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக வரலாற்றில் இந்த முப்பெரும் விழா என்பது வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள மிகச் சிறப்பான விழாவாக அமைய உள்ளது. முப்பெரும் விழா பந்தலில் ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு லட்சம் இருக்கைகள் போட போகிறோம், அப்போ எத்தனை பேர் கலந்துக்கொள்வார்கள் என நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.

அந்த அளவிற்கு திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விழாவாக இந்த முப்பெரும் விழா அமையும். இந்த முப்பெரும் விழா கரூரில் நடைபெறுவதற்கு அனுமதி அளித்த கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.