சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி  நடைபெற்று வருவதால்,   தென்மாவட்டங்களுக்கு செல்லும் 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்றும் ஒரு ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என  தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில்  நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள்  மற்றும் மேம்படுத்தும் பணிகள் காரணமாக, மலைக்கோட்டை, பாண்டியன், சோழன், ராமேஸ்வரம் உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ரூ.734.91 கோடி மதிப்பில் மிகப்பெரிய மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக முதலில் 1, 2-வது நடைமேடைகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மூடப்பட்டன. பின்னர் 3, 4-வது நடைமேடைகளும் மூடப்பட்டன. இதனால், எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை, எழும்பூரில் இருந்து வழக்கமாகப் புறப்படும் மலைக்கோட்டை, சோழன், பாண்டியன் மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட தேதிகளில் இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், புறப்படும் இடமான தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை – திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.

மதுரை – சென்னை பாண்டியன் விரைவு ரயில் வரும் 10ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். எனினும், எழும்பூரில் இருந்து புறப்பாடு மாற்றமில்லை

சென்னை – திருச்சி சோழன் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். எனினும், மறுமார்க்கமாக எழும்பூர் வரை இயங்கும்

சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.

சென்னை – மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வழக்கம் போல எழும்பூர் வரை இயங்கும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.