சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

100 வயதாகும், இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஒய்வு எடுத்து வருகிறார். இவர் கடந்த வாரம்  (, கடந்த 22ம் தேதி,) திடீரென வீட்டில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால்,  தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து  சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு  நரம்பியல், நுரையீரல், இதயம் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் அடங்கிய மருத்துவர் குழு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 சிகிச்சை பெற்று வரும்போதே,  கடந்த 24-ந் தேதி உணவு சாப்பிடும் போது நல்லகண்ணுவுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டன. மேலும் உணவுக் குழாயில் சிக்கி இருந்த துகள்கள் அகற்றப்பட்டன. இதனால் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால்,   செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. மேலும் தோழர்களை அடையாளம் காணும் அளவுக்கு அவரது உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், உ.வாசுகி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று முத்தரசன் மற்றும் நல்லகண்ணு மகள் டாக்டர் ஆண்டாள் ஆகியோரிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், “தோழர் நல்லகண்ணு மீண்டு வருவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்றார்.

இந்த நிலையில், இன்று முற்பகல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்,  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து  நலம் விசாரித்தார்.