மதுரை: முதலமைச்சர் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பல்வேறு அதிருப்தி நிலவி வரும் நிலையில், மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் தூக்கி எறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
வைகை ஆற்றில் மிதந்து வந்த மனுக்களை பார்த்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தண்ணீரில் மிதக்கிறதே என்று ஆதங்கப்பட்டுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப பல முகாம்களில் பெறப்படும் மனுக்கள் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் குறைகளை தீர்க்க உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக அரசு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் பொதுமக்களின் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும் என்றும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 15-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, இந்த முகாட்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் முழுமையாக ஆளுங்கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதுடன், அவர்கள் அழைத்து வருபவர்களே மனுக்களை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மனு கொடுப்பவர்களில் பெரும்பாலோர் மகளிர் உரிமைத் தொகை கேட்டும், பொறம்போக்கு இடங்களில் குடியிருந்து வருபவர்கள் பட்டா கேட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சிலர் மட்டுமே, பிறப்பு, இறப்பு சான்றிதழ், மற்றும் ரேசன் ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த மனுக்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு தகவல் வரும் என கூறி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் முழுமையாக திமுகவினர் கட்டுப்பாட்டிலே நடைபெறுவதால், மாற்று கட்சியினர் அங்கு செல்லவே தயங்கும் நிலை உள்ளது. மேலும், அதிகாரிகளும் கைகட்டி, வாய்பொத்தி, பொதுமக்களின் கேள்விக்களுக்குகூட பதில் தெரிவிக்காத நிலையே உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் வில்லங்கமாக கேட்டால், அவர்களுக்கு திமுகவினரே மிரட்டும் தொனியில் பதில் அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கண்ட பொதுமக்கள் ஆட்சியாளர்கள்மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பதறியடித்து ஓடிவந்த போலீசார், ஆற்றில் இறங்கி ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்தனர். மேலும், ஆற்றின் கரையோரம் எங்கும் சிக்கி உள்ளதா என தேடி தேடி சென்று மனுக்களை மீட்டனர். அந்த பகுதி மக்களிடமும்,ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட மனுக்களை கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியில் விசாரித்து வரும் போலீசார், மனுக்களை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த முகாம்களில் பெற்றப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. ஆற்றில் மிதக்கும் மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.