சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11, 12ந்தேதிகளில் கோவை, திருப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, சில நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின்,  உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் மக்கள் பணியாற்றி வருகிறார். இதைத்தொடர்ந்து,   ஸ்டாலின் மீண்டும் தனது மாவட்ட சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அதன்படி வரும் 11 மற்றும் ந்தேதி கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஆகஸ்டு 11ந்தேதி  சென்னையில் இருந்து  விமானம் மூலம்  கோவை செல்லும் முதல்வர் அங்கிருந்து திருப்பூருக்கு கார் மூலம் பயணம் செய்கிறார். அப்போது திமுகவினர் உள்பட அரசியல் கட்சியினரின் வரவேற்பினை ஏற்றுக்கொள்ளுகிறார்.   திருப்பூர்  வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.  பின்னர், திருப்பூர் ஆருகே  மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.  இரவு கோவையில் ஓய்வு எடுக்கிறார்.

அடுத்த நாளான,  ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.

கொங்கு மண்டலத்தில் இரண்டு நாள் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், கோவையில், திருப்பூர் , பொள்ளாச்சி பகுதிகளில்  ரோடு ஷோ மேற்கொள்ளவும்  திட்டமிட்டுள்ளார்.