சென்னை: அண்ணா வழியில் பயணிப்போம், 1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் அமையும் என சென்னையில், த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டு நடிகர் விஜய் பேசினார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் முழுமூச்சாக தேர்தல் பணியில் இறங்கி உள்ள நிலையில், புதிதாக தொடங்கப் பட்ட தவெகவும், தனது பங்குக்கு ஆட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி (Mobile app) அறிமுகம் விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னையில் புறநகர் பகுதியான பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகரும், தவெக தலைவருமான விஜய், தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ என்பதன் கீழ் உறுப்பினர் சேர்க்கை சேர்க்கைக்கான செயலியை த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டார். ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராக்கும் வகையில் செயல்பாட்டுக்கு வந்தது தவெக செயலி. இதையடுத்து, விஜய் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் என 3 தலைமுறைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ”தமிழக அரசியலில் 1967, 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை போன்று 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் அமையப் போகிறது. இரு மாபெரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்றவர்கள் அதிகார பலத்தை எதிர்த்துதான் புதிதாக வந்தவர்கள் வென்றார்கள். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு சென்று அனைத்து மக்களையும் சந்தித்துதான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

அண்ணா கூறியதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன், ”மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு” இதனை சரியாகச் செய்தால் போதும், வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டின் கீழ் அனைத்து குடும்பத்தையும் உறுப்பினராக சேர்த்து நம்மால் வெற்றி பெற முடியும்.
இதன்பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களுடன்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்தார்.
இது, நேரடியாக அலுவலகங்களுக்குச் சென்று படிவங்களைப் பூர்த்தி செய்யும் சிரமத்தைக் குறைத்து, உறுப்பினர் சேர்க்கை நடைமுறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய், இந்தச் செயலி மூலம் பெருமளவிலான இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும் கட்சியில் இணைக்க முடியும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளர்.
இந்த செயலி அறிமுக நிகழ்வின்போது, கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் மக்கள் இயக்கப் பிரதிநிதிகள் உடனிருந்தனர். இந்தச் செயலியின் மூலம், பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களிலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளலாம்.
சமீபகாலமாக, நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை அவர் தொடங்கினார். இந்தச் செயலி அறிமுகம், தமிழக அரசியலில் தவெகவின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.