தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்று நிறைவடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் இவர்களுக்கு பிரிவுபசாரம் நடைபெற்றதுடன் மாநிலங்களவையில் இவர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையும் வெளியானது.
மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக -வின் பி. வில்சன் ஆறு ஆண்டுகளில் மொத்தம் 315 அமர்வுகளில் 300 அமர்வுகள் வருகை தந்து 95 விழுக்காடு வருகை புரிந்துள்ளார்.
பி. வில்சன் (திமுக) வருகை 300/315 (95.24%), எம்.எம். அப்துல்லா (திமுக) வருகை 191/212 (90.09%), என். சண்முகம் (திமுக) 280/315 (88.89%), என். சந்திரசேகரன் (அதிமுக) 217/315 (68.89%), வைகோ (மதிமுக) 178/315 (56.51%) மற்றும் அன்புமணி ராமதாஸ் (பாமக) 92/315. (29.21%) வருகை புரிந்து விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.

இதில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெறும் 92 நாட்கள் மட்டுமே அதாவது 29 விழுக்காடு மட்டுமே வருகை தந்துள்ளது அவரது கட்சியினரை மட்டுமன்றி தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், அன்புமணியால் எந்த முன்னேற்றமும் இல்லையென்று பாமக நிறுவனரும் அவரது தந்தையுமான ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன் கூறியிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அன்புமணியின் செயல்திறன் குறித்த அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
தவிர, நேற்று மாநிலங்களவையில் இவர்களை பாராட்டி பேசிய உறுப்பினர்களில் கேரளாவைச் சேர்ந்த உறுப்பினர் ஜான் பிரிட்டோ அன்புமணிக்கு fare well என்று அறிவுரை வழங்கியது, அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையேயான மோதல் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா முதல் டெல்லி வரை அனைவரும் அறிந்த கதையாகியுள்ளதை உணர்த்தியுள்ளது.
இந்த நிலையில் தனது பெயருக்குப் பின்னால் ராமதாஸ் என்ற ஒட்டு இல்லாமல் தனது கட்சி உறவுகளுடன் அடுத்த பெர்பாமன்சுக்கு அன்புமணி தன்னை எப்படி தயார் செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் குறிப்பாக வடதமிழக மக்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.