திருப்பத்தூர் :  தமிழ்நாட்டில்,  தேசிய சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளது என திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு  நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இரண்டு நாள் பயணமாக வேலூர் திருப்பத்தூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வேலூர் மாவட்டத்தில்  198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தையும், கருணாநிதி திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தார்.

பின்னர் மாலையில் சாலை வழியாக திருப்பத்தூர் சென்ற அவர், அங்கு நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவச் சிலையையும் திறந்து வைத்தார். இரவு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வுவெடுத்தார். தொடர்ந்து இன்று காலை   10.30 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, 11 மணிக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து பேசியவர், மத்திய அரசு   ஓரவஞ்சனை செய்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்று கூறியதுடன்,  “தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலமாக வருவாயும் ஈட்டி வேலை வாய்ப்பும் அளிக்கிறது திருப்பத்தூர் மாவட்டம். தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மக்கள் அன்பை வாரி வழங்கி வருகின்றனர்.

2026 மட்டுமல்ல 31 ஆக இருந்தாலும் 36 ஆக இருந்தாலும் என்றைக்கும் நாம்தான் நாட்டை ஆளப்போகிறோம். தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையில்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழித்த வளர்ச்சியை திமுக அரசு சீர்படுத்தியுள்ளது.  ஒன்றிய அரசு  தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. சமூக முன்னேற்ற குறியீடுகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.21%ஆக உள்ளது. பணவீக்கம் குறைந்த மாநிலம் தமிழ்நாடு. நாட்டின் அதிக நகரமயமாக்கல் நகரமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. தேசிய சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் பல ஆண்டுகளாக அதிகமாக உள்ளது.”

இவ்வாறு பேசினார்.

 தொடர்ந்து, நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 12 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தரும் முதல்வர், அங்கிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்புகிறார். மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை தருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்