கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது, இதனால் ஜூன் 28ம் தேதி வரை தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை-சுரல்மலா பகுதியில் கனமழை பெய்து வருவதால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வருடம் முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை அளித்த தகவலின்படி, “சூரல்மலா ஆற்றின் நீர் பெய்ல் பாலம் அருகே ஆற்றங்கரையில் கடுமையாகப் பாய்கிறது” என்று தெரிவித்தனர். “ஆற்றுப்படுகையில் பழுதுபார்க்கும் பணிகளுக்காக சேகரிக்கப்பட்ட மண்ணும் அடித்துச் செல்லப்படுகிறது, மேலும் அட்டமலா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன,” என்று கூறினர்.

புஞ்சிரிமட்டம் வனப்பகுதியின் மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. முந்தைய பேரழிவில் எஞ்சியிருந்த குப்பைகள் இப்போது மழைநீருடன் சேர்ந்து கீழ்நோக்கி வருகின்றன. இருப்பினும், தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கபானி ஆற்றின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது, மேலும் பாணசுரா நீர்த்தேக்கம் நிரம்பும் அளவை நெருங்கி வருவதால், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வயநாடு உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக இடுக்கியில் உள்ள கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.