மும்பையின் பல பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாகா தாதர், பரேல், குர்லா ஆகிய இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மே 25 ஆம் தேதி காலை 8 மணி முதல் மே 26 ஆம் தேதி காலை 8 மணி வரை, நகரில் 58 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 19 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 15 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மழையால் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால் ரயில் தண்டவாளங்களில் கடுமையான நீர் தேங்கி, உள்ளூர் ரயில்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல் ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு முதல் சிவப்பு வரையிலான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
மேலும் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MHADA), மும்பையில் மொத்தம் 96 பழைய கட்டிடங்களில் வசிக்கும் 3,162 க்கும் மேற்பட்ட மக்களை எச்சரித்துள்ளது. அவை ‘மிகவும் ஆபத்தான’ நிலையில் உள்ளன. மேலும், பருவமழை உச்சத்தில் இருக்கும்போது கனமழையின் போது அவை இடிந்து விழும் அபாயம் உள்ளது. MHADA பட்டியலிட்ட கட்டிடங்கள் முக்கியமாக தெற்கு மற்றும் மத்திய மும்பை பகுதிகளில் அமைந்துள்ளன. பாதுகாப்பு நோக்கங்களுக்காக குடியிருப்பாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் உடனடியாக கட்டிடங்களை காலி செய்யுமாறு MHADA கேட்டுக் கொண்டுள்ளது.