கிருஷ்ணகிரி: தொடர் மழை மற்றும் அணை நீர் திறப்பு காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாகவும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் பெண்ணை ஆறாக பிறந்து, 430 கிமீ தூரம் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திலும், விழுப்புரம், திருக்கோவிலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திலும் பாய்ந்து, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி சுமார் 14,449 சதுர கி.மீ. ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு முதலியன இதன் முக்கியத் துணையாறுகளாகும்.
கடந்த 2024ம் ஆண்டு உருவான பெஞ்சல் புயலின்போது, பெய்த கனமழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.எஸ் அணையும் நிரம்பியதால், ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வந்து, அதுவும் நிரம்பியதால், சாத்தனூர் திறக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் கிராமங்களை இணைக்க, நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் அடித்து செல்லப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கேஆர்பி அணை அதன் மொத்த உயரமான 52 அடியில் தற்பொழுது 51 அடியை எட்டியுள்ளது. கேஆர்பி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2400 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,208 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
கே.ஆர்.பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் அணையின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கையாக கேஆர்பி அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தென்பெண்ணையாற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேஆர்பி அணையின் தரைபாலமானது நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் கேஆர்பி அணைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.