சென்னை
நேற்று ஐ எஃப் எஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் தமிழகத்தில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஎப்எஸ் (இந்திய வனப்பணி) பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டு (2024ம் ஆண்டுக்கானது) 150 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. முதலில் முதல்நிலை தேர்வு எழுத்து நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 24 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி மெயின் தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது. இந்த நிலையில் நேர்முக தேர்வு முடிந்து நேற்றிரவு யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் இறுதி தேர்வு முடிவை வெளியிடப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறுகையில், ஐஎப்எஸ் தேர்வுக்கான நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in வெளியிட்டது. இந்திய அளவில் 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேர்ச்சி பெற்ற 143 பேரில் 78 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமி மாணவர்கள். சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் மையங்களில் படித்தவர்கள். முதல் 10 இடங்களில் 6 இடங்களை எங்கள் மாணவர்கள் கைப்பற்றி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மொத்தம் 10 மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 4 பேர் பெண்கள். தமிழ்நாட்டில் கவிஞர் வெண்ணிலா – முருகேசன் தம்பதியினர் மகள் நிலா பாரதி முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 24வது இடம் பிடித்துள்ளார். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதை தொடர்ந்து பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்றார்.