பெங்களூரு: சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோயுள்ளது.

பல ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2008-ல் எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அவர் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டபின் பா.ஜ.க.வுடனான தொடர்பில் இருந்து விலகினார். கடந்த 2022 -ம் ஆண்டு கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற கட்சியை தொடங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில், கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் மார்ச் 2024ல் பா.ஜ.க.வில் இணைந்து போட்டியிட்டார். தற்போது பாஜக எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
இவர்மீதான சுரங்க முறைகேடு வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அவருடன் மேலும் 3 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

கர்நாடகா – ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் சுரங்க குத்தகை எல்லைக் குறிகளை சேதப்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக சுரங்கம் நடத்தியதாகவும் ரெட்டி மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது .
ஒபுலாபுரம் சுரங்க ஊழலில் சட்டவிரோத இரும்புத் தாது சுரங்கம் மற்றும் பாரிய வரி ஏய்ப்பு ஆகியவை அடங்கும். ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம் (OMC) முன்னாள் கர்நாடக அமைச்சர் கலி ஜனார்தன் ரெட்டி மற்றும் அவர்களது நெருங்கிய கூட்டாளியான கர்நாடக சுகாதார அமைச்சர் பி ஸ்ரீராமுலு உள்ளிட்ட செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த ரெட்டி சகோதரர்களுக்குச் சொந்தமானது. சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஷெல் நிறுவனத்துடன் OMC ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த ஷெல் நிறுவனத்திற்கு சிங்கப்பூர், துபாய் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் போன்ற வரி புகலிடங்களில் அலுவலகங்கள் இருந்தன. இந்த ஷெல் நிறுவனத்தின் ஒரு பகுதியை ஜனார்தன் ரெட்டி கையாண்டார். அவர்களின் திட்டத்தின் காரணமாக, பெரும் தொகை பணம் தவிர்க்கப்பட்டது, இதனால் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா: ஆடம்பர திருமணம் நடத்திய ஜனார்த்தன ரெட்டி நிறுவனத்தில் ரெய்டு!
கர்நாடகா: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஜனார்த்தன் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை