சேலம்: சேலம் அருகே உள்ள  வாழப்பாடி  பகுதியில்,  2 சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து  சடலமாக மீட்கப்பட்டது பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இது கொலையா? அல்லது விபத்தா  என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சேலம் மாவட்டம்  வாழப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தின்  தண்ணீர்த் தொட்டியில்ல் இரண்டு சிறுவர்களின் உடல்கள் இறந்த நிலையில்  இரவு மீட்கப்பட்டுள்ளது.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த மர்ம மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில்,   சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான  விஜயகுமாருக்கும் அவரது  மனைவி இளவரசி ஆகியோருக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு விஜயகுமாரின் வீட்டுக்கு முன் தோண்டப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டியில், இரு குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர்.  இதனால், இவர்களே குழந்தைகளை அடித்து கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினார்கள் என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.  இரு குழந்தைகளும்  தண்ணீர்த் தொட்டியில்  சடலமாக மிதந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதை  மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இரு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் குழந்தைகள் உயிரிழந்து கிடப்பது குறித்து,  தொழிலாளியான  விஜயகுமாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் வெளியே சென்றிருந்த  விஜயகுமார்   உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தபோது,  துக்கியாம்பாளையம் எம்ஜிஆர் நகர் அருகே எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகன்களையும் தாயே தண்ணீர்த் தொட்டியில் போட்டுக் கொலை செய்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தையின் தாயிடம் வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.