திருவண்ணாமலை: மத்திய அரசுடன் சண்டை போடவா உங்களிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்பிய சசிகலா, விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும், இதில் சந்தேகமே இல்லை என நம்பிக்கை தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, அதுகுறித்து மத்தியஅரசு உறுதியாக ஏதும் தெரிவிக்கவில்லை என்றதுடன், எதற்கெடுத்தாலும் மத்தியஅரசுடன் திமுக அரசு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய அரசுடன் சண்டை போடவா உங்களிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், “தமிழ்நாட்டில் திமுக அரசு எவ்வாறு நடக்கிறது என்பது ஊர் அறிந்த விஷயம் தான், எல்லாருக்கும் தெரியும். திமுக அரசு சரிவர செயல்படவில்லை என்பதே உண்மை. தற்போது அரசிடம் எதற்கும் பணம் இல்லை, அவர்களால் எதுவும் செய்ய முடியாது, அதனால் மீதி காலத்தை எப்படியாவது ஓட்டியாக வேண்டும் என்பதால், கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி சீரமைப்பை உடனே நிறுத்த வேண்டும் என்பதை பிரச்சார யுக்தியாக செய்து வருகிறது.
மத்திய அரசை எதிர்க்க வேண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசுடன் சண்டை போடுகிற நோக்கிலேயே இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படு கிறார்கள் என்றார்.
இதையத்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், அமைச்சர் சேகர்பாபு, 2026 தேர்தலுடன் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மூடிவிடுவார் என்று கூறியுள்ளாரே என கேட்டதற்கு, “திமுகவினர் எங்களை வாழ்த்துவார்கள் என்றா நினைக்கிறீர்கள் என எதிர் கேள்வி எழுப்பியதுடன், அவர்கள் சொல்கிறபடி சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நாங்கள் வந்து காட்டுகிறோம் என தெரிவித்தவர், விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும், இதில் சந்தேகமே இல்லை” என சசிகலா உறுதிபட தெரிவித்தார்,.