சென்னை: சேப்பாக்கத்தில் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஆட்டத்தை காண டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் மாநகர பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடற்கரை வேளச்சேரி ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் கிரிகெட் ரசிகர்களுக்காக கிரிக்கெட் ஆட்டத்தை காண டிக்கெட் வைத்துள்ள ரசிகர்களுக்கு இலவச பயணம் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநகர பேருந்தும் இலவச பயண அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி கடந்த 22ம் தேதி கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
2வது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டுகளிக்க பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டியை காண வரும் ரசிகர்கள் அரசு பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து தவிர) இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்போர், போட்டி நடப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின் 3 மணி நேரத்திற்குள்ளும் கட்டணமின்றி பயணிக்கலாம். போட்டியை முன்னிட்டு நாளை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் – சேப்பாக்கம் மைதானம் வரை மாலை 4 மணி முதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரசிகர்களின் வசதிக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் சென்னை கடற்கரை வேளச்சேரி ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.