சென்னை’
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணிவியி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. சிறப்பு புலனாய்வு குழு போலீசார், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கோட்டூர்புரம் போலீசாரிடம் இருந்த கோப்புகளை பெற்று விசாரணையை தொடங்கினர்.
காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனிடம் நேற்று முன் தினம் இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய நடந்த விசாரணைக்கு பின் நேற்று அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு ஞானசேகரன் அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்தது.
மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை விசாரணையில் உள்ள ஞானசேகரனுக்கு அதிகாலையில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.