சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் , ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக, வேறு கட்சிகளை சேர்ந்த நட்சத்திர தலைவர்கள் பிரச்சாரம் செய்தால், அவர்களுக்கான செலவு வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது, அவர்களுக்கு தேர்தல் செலவீனங்களில் இருந்து விலக்கு கோர முடியாது என அறிவித்துள்ளது.
ஈவிகேஎஸ் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக களமிறங்கி உள்ளது. திமுக சார்பில் அந்த தொகுதியில் ஏற்கனவே ஒருமுறை எம்எல்ஏவாக இருந்த வி.சி.சந்திரக்குமார் களமிறக்கப்பட்டு உள்ளார். அங்கு நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் என அறிவித்துள்ளது. ஆனால், அதிமுக, தேமுதிக, பாமக கட்சிகள், ஆளும்கட்சியின் தலைவிரித்தாடும் அராஜகத்தால் போட்டியிடவில்லை என அறிவித்து உள்ளது. இதனால் திமுக நாம் தமிழர் கட்சி இடையேதான் போட்டி ஏற்படும் சூழல் எற்பட்டுள்ளது. இதனால் திமுக எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த சூழலில் தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வேறு கட்சி நட்சத்திர பேச்சாளர்கள் தலைவர்கள் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால், அவை வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தலைமை தேர்தல் அதிகாரி தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.
தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்தத் தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 98.ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை 10.01.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்ப் பட்டியலைத் தெரிவித்து இந்தியத் தேர்தல் ஆணையம் / தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 17.01.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரச்சாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.