சென்னை: திமுகவின் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய ஆட்சியை பிடித்த திமுக, தற்போது நீட் தேர்வை ரத்து மத்தியஅரசுதான் ரத்து செய்யும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்  தெரிவித்துள்ள நிலையில்,  இதை சுட்டிக்காட்டி,  எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றனர். தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது, மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என சொல்கின்றனர். எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறாது இது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது  என காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய (ஜனவரி 10ந்தேதி) அமர்வில், நீட் விவகாரம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

நீட் நுழைவுத் தேர்வு, டங்ஸ்டன் சுரங்க அனுமதி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கும் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசும்போது,நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னீர்கள். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு ஆகப்போகிறது. இன்னும் நீட் தேர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது என கூறினார்.

இதற்கு  பதில் கூறிய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,  இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றவர்,   நாங்கள் ஆட்சியில் இருந்தபோதோ அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியின்போதோ நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால், உங்கள் ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்துக்கு வந்தது. மத்திய அரசால்தான் நீட் தேர்வை ரத்துசெய்ய முடியும். அதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றார்.

இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  ஆனால் நீங்கள்தான் தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள். நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தது யார்? கடந்த காங்கிரஸ் ஆட்சியில்தானே நீட் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன  என மேலும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர்,  ஆனால், நீட் அமல்படுத்திய பாகக ஆட்சிதான் என்றவர், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்துசெய்வோம். தமிழகத்துக்கு விதிவிலக்கு பெறுவோம் என்றார். இதையடுத்து மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக இருவருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. ஒருவருடைய ஆட்சியை மற்றொருவர் குறைசொல்லிக்கொண்டனர்.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி ஆட்சியை பிடித்த திமுக, தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ள சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,  நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று ஆட்சியாளர்கள் சொன்னார்களே என்று கேள்வி எழுப்பியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் என்று கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது. எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முடிவடைந்துள்ள நிலையில், கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்தோ, வரவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றியோ எதுவுமே தெரிவிக்காமல் பழைய பிரச்சினையை எடுத்து தவெக தலைவர் விஜய் கருத்து செய்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. “விஜய் பனையூரில் இருந்து இருப்பை உறுதி செய்து கொள்ளும் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.” என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.