சென்னை: பிப்ரவரி 1ந்தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக, சென்னை ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டணம் உயர்தப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணமா ரூ.50 அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுகளை சமாளிக்க முடியாமல், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை அதிகாரப்பூர்வமாக உயர்த்த ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் முடிவெடுத்து அறிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதும், 1.8 கி.மீ., தூரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் இரட்டிப்பாக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்டோ கட்டணம் உயர்த்தி 11 ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்து புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி ஆட்டோ தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்கவும் நீதிமன்றம்அறிவுறுத்தியது.
இந்த நிலையில், பிப்ரவரி 1ந்தேதி முதல் புதிய ஆட்டோ கட்டணம் நடைமுறைக்கு வருவதாக ஆட்டோ தொழிற்சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து, ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு சங்கங்களில் உள்ள உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ஏ.ஜாஹூர் ஹூசைன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதவாது,
தமிழ்நாட்டில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், போக்குவரத்து துறை ஆணையர், உள்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என அனைவரிடமும் கோரிக்கைகளை வைத்தும் ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.
வீட்டு வாடகை, வாகனங்களின் உதிரி பாகங்களின் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, ஆர்.டி.ஓ. கட்டணங்கள் போன்ற விலைவாசி உயர்வுகளை சமாளிக்க முடியாமல், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
எனவே இதனை சரிசெய்து பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிட அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்நாடு அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கும் வரை புதிய கட்டணத்தில் ஆட்டோவை இயக்க முடிவு செய்திருக்கிறோம்.
அதன்படி, முதல் 1.8 கி.மீ.க்கு ரூ.50, கூடுதல் கி.மீ.க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணமாக நிமிடத்துக்கு 1 ரூபாய் 50 காசு, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த புதிய கட்டணத்தில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் ஆட்டோக்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் அவர் கூறப்பட்டுள்ளது.