சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும்,  அரசு பேருந்துகளில்  1.87 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சென்னை உள்பட  மாநிலங்கள் முழுவதும்  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் தமிழ்நாட அரசு இயக்கி வருகிறது. அதன்படி  நேற்று மட்டும்  வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மொத்தமாக 3,406 பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன்மூலம் 1,87,330 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையைப் பொருத்தவரை 3 இடங்களில் இருந்து 1,445 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.  இதன்படி காலை முதலே நிலையத்துக்கு எடுத்து பேருந்துகள் வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பயணிப்பதற்காக மாலை முதல் பேருந்து நிலையங்களை நோக்கி பொதுமக்கள் வரத் தொடங்கினர். இதற்காக மாநகர போக்கு வரத்துக் கழகம் சார்பில் 320 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பயணிகளின் வசதிக்ளுக்காக கூடுதல் முன்பதிவு மையங்கள், உதவி மையங்கள், தானியங்கி பயணச்சீட்டு மையங்கள் போன்றவை போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக பயணித்துள்ளனர்.  நேற்று ஒரே நாளில் மட்டும்  1,87,330 பேர் அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,314 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தமாக 3,406 பேருந்துகள் இயக்கப்பட்டது என்று போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்- செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிசுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக உரிமையாளர்கள் கூறும்போது, “அரசின் ஒப்புதலுடன் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்துக்கு அதிகமாக வசூலிக்கப்படுவதில்லை. கூடுதல் கட்டணம் தொடர்பாக 90433 79664 என்ற எண்ணை அணுகலாம்” என்றனர்.

உதவி எண்கள்: பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நேற்றைய தினம் சென்னையில் இருந்து 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் விவரங்களுக்கும், புகார்களுக்கும் 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையும் அணுகலாம்” என்றனர்.