சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளின் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது மனுவில், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஏசி அல்லாத திரையரங்குக்கு 2 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகவும், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதை பரிசீலித்த தமிழ்நாடு அரசு திரையரங்கு உரிமையாளர்களின் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்வு
இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படும். திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து திரையரங்குகள் உரிமை யாளர்கள் இன்று விளக்கம் அளிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.