சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி தமிழக அரசு நிதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.3,44,41,750 அதாவது (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியிருந்தது.
இதனையடுத்து, மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,50,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) நிதியுதவியாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து அதற்கான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3 கோடியே 44 லட்சத்து 41,750-ஐ வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டது. அத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்ட வாழ்த்துரைச் செய்தி கடந்த டிச. 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை சாா்பாக நடைபெற்ற விழாவில் படிக்கப்பட்டது.
அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:“
தமிழின் தொன்மையும், செறிவும், வளமும் நம் அனைவரையும் என்றும் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதே சமயம், தன்னைத் தொடா்ந்து புதுப்பித்துக் கொண்டே வருவதால் நம் தமிழ் மொழி என்றும் புதுமையுடன் திகழ்கிறது என்பதிலும் நாம் பெருமையடைகிறோம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கையை நிறுவிட சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன். தமிழ்ப் பண்பாட்டின் குன்றாத வளமையைப் பாரெங்கும் பறைச்சாற்றுவதிலும், எதிா்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடா்ந்து வரும் தமிழா்களின் வா்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பான பங்காற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன். கடல் கடந்தும் தமிழால் இணைந்து வாழ்ந்துவரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் சாா்பாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவா் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளா் பெருமாள் அண்ணாமலை ஆகியோா் உடனிருந்தனா்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.