சென்னை
சென்னை மாநகராட்சி சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கும் போது போக்குவரத்து தடை செய்ய தானியங்கு தடுப்புக்களை அமைக்க உள்ளது.
சென்னையில் உள்ள 17 சுரங்கப்பாதைகளில் கனமழை காலங்களில் மழைநீர் தேங்குவதால் மழை நேரங்களில் சில நேரம் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சுரங்கப்பாதைகளில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் புதிய முயற்சியாக, சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்புகளை அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. சுரங்கப்பாதைகளில் மழைநீர் அளவு உயர்வதை தானாக கண்டறிய ஒரு தானியங்கி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செயலி மூலம் மழைநீர் உயர்வது தொடர்பான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.