சென்னை
நாளைய கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
”கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்று பொறுமையையும், “ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள்” என ஈகையையும், “பகைவர்களையும் நேசியுங்கள்” எனக் கூறி இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.
போர்களினாலும், வெறுப்புணர்வினாலும் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் அவர் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களின் நலனுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் சிறுபான்மையினர் நல ஆணையம், பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல இயக்ககம் எனப் பல திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றி வந்துள்ளார். அவரது வழியில் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும் – சம உரிமையோடும் – சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து, அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ,
”கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்”.
எனத் தெரிவித்துள்ளார் .