ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் இந்தியா வருகை தந்த இலங்கையின் புதிய அதிபர் திசநாயகாவிடம், பிரதமர் மோடி, இலங்கை பிரச்சினை குறித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. அதுபோல, இலங்கை பிரச்சினை குறித்து ராகுல்காந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வங்கக்கடலில், தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, அவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.