ரியலூர்

ரியலூர் தவெக மகளிர் அணியினர் முழுவதுமாக கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலனி தெருவில் வசித்து வரும் பிரியதர்ஷினி ஜெயபால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.இவர்  அண்மையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் மகளிர் அணி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு சென்றார்.

பிறகு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விஜய் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவரது சொந்த ஊரான கார்குடி காலனி தெருவிலும் கொடி ஏற்றப்பட்டது.

இதன் பிறகு நடந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பிரியதர்ஷினி உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. எனவே பிரியதர்ஷினி உள்பட 10-க்கும் மேற்பட்ட மகளிர் நிர்வாகிகள் ஏற்றப்பட்ட தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியினை நேற்று இறக்கினர்.

மேலும் கட்சி துண்டு, காரில் கட்டிய கொடி மற்றும் பேட்ச் அட்டைகளை எடுத்துச் சென்றபோது அங்கு வந்த கட்சி நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி நீங்கள் இறக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவர்கள், தங்கள் சொந்த செலவில்தான் செய்துள்ளோம் என்றும், கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என்று தலைவர் விஜய் கூறியதால்தான் கட்சியில் சேர்ந்ததாகவும் ஆனால் பெண்களுக்கு மதிப்பில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளனர்.

விஜய்யின் கட்சியில் மகளிர் நிர்வாகிகள் கூண்டோடு விலகிய சம்பவம் அரியலூர் மாவட்ட த வெ க கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.