சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியர் அகவிலைப்படி வழக்கில் சேடிஸ்ட் மனநிலையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக, கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சிஐடியு தொழிலாளர் அமைப்பு விமர்சனம் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே திமுகவின் நடவடிக்கையை விசிக விமர்சனம் செய்த நிலையில், தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகனும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், தற்போது கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமும் விமர்சனம் செய்துள்ளது. ஏற்கனவே சாம்சங் தொழிலாளர் போராட்டம் விஷயத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அமைச்சர்கள் தலையிட்டு பிரச்சினையை முடித்த நிலையில், போராடியவர்களை சாம்சங் நிறுவனம் வேலை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் திமுக அரசு ஏதும் செய்யவில்லை என குமுறும் கம்யூனிஸ்டு கட்சியினர், தற்போது போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில் திமுக அரசை நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினாரின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கக்கூடாது என கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. அதிமுக அரசு செய்த தவறுகளை சரி செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதிமுகவின் அரசாணையை அப்படியே அமலாக்கியது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அகவிலைப்படி உயர்வு வழங்க பல்வேறு நீதிமன்றங்கள் உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் வரை தொடர்ச்சியாக அரசு மேல்லமுறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து வருகிறது. இந்த அனைத்து வழக்குகளும் தோற்கும் என்பது அதிகாரிகளுக்கு தெரியும். எனினும், அரசு பணத்தை வீணடித்து பல்லாண்டு காலம் போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டு பணி ஓய்வு பெற்றுள்ள வயதான போக்குவரத்து ஊழியர்களை கொடுமைக்கு உள்ளாக்குகின்றனர்.
இது கொடூரமான நடவடிக்கை. சேடிஸ்ட் மனோநிலை. எங்களை எதிர்த்து ஜெயிப்பதா. நாங்கள் இழுத்தடிக்கிறோம் பாருங்கள் என்ற அதிகார வர்க்கத் திமிர்தனம். இதைவிட ஒரு கேவலமான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள முடியாது. எல்லோரையும் போன்று ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்குங்கள். இல்லாவிட்டால் அரசுக்கு அவப்பெயர் அவமானம் அனைத்தும் வந்து சேரும். திமுக நீண்டகால பழிச் சொல்லுக்கு உள்ளாகும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.