சென்னை: வங்கக்கடலில்  சென்னைக்கு கிழக்கே 390 கிமீ கிழக்கில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்  படிப்படியாக வலுவிழக்கும் வாயப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில்,  தற்போது,  சென்னைக்கு 390 கிமீ கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் (டிச.22 காலை 6 மணி) தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 12 மணி நேரத்திற்குப் பிறகு படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.