சென்னை:  2025ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை அமர்வு  ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு  தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் வெறும் இரண்டுநாட்கள் மட்டுமே நடைபெற்றது. இதற்கு பல உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்திருந் தனர். இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, 2025ம் ஆண்டின் முதல் சட்டமன்ற அமர்வு ஜனவரி 6ந்தேதி தொடங்கும் என கூறினார்.

 “2025-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜன. 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழுதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார். உரையை ஆளுநர் முழுமையாக படிப்பார் என நம்புகிறேன் என்று கூறியவர், ஏற்கனவே  2011 2021 சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 16-ஆவது சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடா் 2024ம் ஆண்டு பிப். 12-ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், அது அவர் சில சொற்களை வாசிப்பதை தவிர்த்ததால்,அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  அதன்பிறகு, கடந்த பிப். 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அரசின் பொது மற்றும் வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு பேரவை கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, துறை வாரியான செலவுகளுக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக சட்டப் பேரவை மீண்டும் கூடியது. கடந்த ஜூன் மாதம் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்கள் இடைவெளியில் மீண்டும் கடந்த 9-ஆம் தேதி கூடி இரண்டு நாள்கள் அவை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.