ஈரோடு: ஈரோட்டில் களப்பணி ஆற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று ஈரோடு மாவட்டத்தில், 559 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 222 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு மாவட்டம், ஈரோடு, சோலாரில் ரூ.951 கோடியில் 559 திட்டப்பணிகளைத் இன்று  திறந்து வைத்ததுடன்,   ரூ.133 கோடியில் 222 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்  நாட்டினார். மேலும்,   ரூ.284 கோடியில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, அம்மாவட்டத்தில்  முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் வருகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

நேற்று (டிசம்பர் 19ந்தேதி) ஈரோடு சென்ற முதல்வருக்கு, திமுகவினர் பெரும் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று பிற்பகல்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் 2-வது கோடி பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம்பாள் என்ப வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 2 கோடியே ஒன்னாவது பயனாளியான வசந்தா என்பவர் வீட்டுக்கு நேரடியாக சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு விவரங்களை கேட்டு அறிந்தார்.

இதைத்தொடர்ந்து காளிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் முதல்-அமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உள்ள தங்கம் மஹாலில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிர்வாகிகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக முத்து மஹாலில் நடைபெற்ற மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திர குமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்து சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகை சென்று இரவில் ஓய்வெடுத்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று இரண்டாவது நாள் களஆய்வை நடத்த  முதலமைச்சர்,  காலை 10 மணிக்கு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பினார். சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் சென்ற அவருக்கு  சாலையின் இருபுறமும் திமுகவினர், பொதுமக்கள் திரளாக  நின்று வரவேற்புஅளித்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்,   ஈரோடு மாவட்டம் சென்னி மலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளை திறந்து வைத்தார்.

நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு திட்டத்தில் கோபி, சத்திய மங்கலம், பவானி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியி ருப்புகளை திறந்து வைத்தார்.

ரூ.59.60 கோடியில் 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட்ட ஈரோடு ரிங் ரோடு, ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் ரோடு, ஈரோடு பஸ் நிலைய புதிய வணிக வளாகம், பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் மணிமண்டபம் மற்றும் ஊர்வசி சிலை என மாவட்ட முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதேபோல் சோலார் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சந்தை, தியாகி பொல்லான் அரங்கம் மற்றும் சிலை உள்பட மாவட்ட முழுவதும் ரூ.133 கோடியே 41 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும் விழாவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்வாறு ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1,368 கோடியே 88 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவுக்கு பிறகு கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக சோலார், புதிய பேருந்து நிலைய வளாகப் பகுதியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி, கோவை டி.ஐ.ஜி சரவண சுந்தர், ஈரோடு எஸ்பி ஜவகர் தலைமையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.