சென்னை: கனமழையால் விடுமுறை விடபட்ட அன்று (கடந்த 12-ந்தேதி ) நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வை நாளை (21ந்தேதி) நடத்த  பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, ஏற்கனவே பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வை ஒத்தி வைத்துள்ளது. இதற்கிடையில், கடந்த வாரம் பெய்த மழை காரணமாக, கடந்த 12-ந்தேதி சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் அன்று நடைபெற வேண்டிய தேர்வுகளை நாளை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளத.

தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையில் ஃபெஞ்சல் புயல் மழையால் கடந்த 12-ந்தேதி சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த நாளில் 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத் தேர்வும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வும் நடத்த முடியாமல் போனது.

அந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில்,  விடுமுறை அன்று நடைபெற வேண்டிய தேர்வுகளை நாளை (21ந்தேதி) நடத்த  கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,   6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட வேண்டும் என  தெரிவித்துள்ளது.

மேலும்,  6, 7, 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பிற வகுப்புகளுக்கும் வாய்மொழி வாயிலாக உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன