சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை வார இறுதி நாட்களை முன்னிட்டு 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகைகளின்போது நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பயணிகளின் வசதிக்காக வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் வார இறுதிநாள் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார இறுதிநாளையொட்டி 706 சிறப்பு பேருநதுகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிச.20ம் தேதி (வெள்ளிக்கிழமை), 21ம் தேதி (சனிக்கிழமை), 22ம் தேதி (ஞாயிறு) கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 325 பேருந்துகளும், நாளை 280 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் மொத்தம் 81 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,
மேலும் மாதவரத்திலிருந்து டிச.20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.