சென்னை:  அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியல் முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, அதிகாரத்தில் பங்கு என அறிவித்துள்ள நடிகர் விஜய் கட்சியான தவெகவில் இணைவார் என்பது தெளிவாகி உள்ளது.

திமுகவின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து,. அவர் அங்கிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் வேறு  கட்சியில் இணைவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில், அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியல் களத்தில் இணைவேன் என்று  கூறியுள்ளார்.

 இந்த நிலையில் இன்று முற்பகல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ,  “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோளாக உள்ளது.  அதனை கூறியதற்காக என்னை இடைநீக்கம் செய்தனர். இந்த கொள்கையை என்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக பிரசாரம் மூலமாக கண்டிப்பாக உருவாக்குவேன்  என்று கூறியதுடன், எதிர்கால திட்டம் குறித்து பத்திரிகையாளர் களை சந்தித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்தார்.

நடிகர் விஜய் தனது கட்சியான தவெக 2026ல் ஆட்சியை பிடிக்கும் என்றும், கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என குறிப்பிட்டு பேசிய, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்துதான், முன்னாள் விசிக நிர்வாகி ஆதவ்அர்ஜுனாவும்  ஆட்சி அதிகாரத்தில் பங்கு, வாரிசு மற்றும் மன்னாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசி வந்ததார். அதனால்தான், அவர் விசிகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க. முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க.வின் செயல்களை கடுமையாக விமர்சித்தார். வாரிசு அரசியல், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் என கூறினார். விசிக தி.மு.க.வுடனான கூட்டணியில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் அர்ஜுனா பேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விசயத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். அதோடு, கட்சியின் நலன் மற்றும்  நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகும் வகையில் இருப்பதாக் கூறி ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாதகாலம் இடைநீக்கம் செய்வதாக தொல். திருமாவளவன்  அறிவித்தார்.

ஆனால், அதன்பிறகும், அவரது விமர்சனம் தொடர்ந்தது. இதுகுறித்து கூறிய திருமாவும்,   ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகும்  எதிர்மறையான கருத்துகளை  தெரிவிக்கிறார் எனவும், அவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதுபோல தெரிகிறது எனவும் திருமாவளவன் பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து,   விசிக கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எளிய மக்கள் குறிப்பாக, ‘சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்’ என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே  விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை  நான் விரும்பவில்லை.

ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

”இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில்  ‘சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்’ அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.

அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்…” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல,  ஆதவ் அர்ஜுனாவுக்கு அஜெண்டா இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் சந்தேகம் கிளப்பிய நிலையில், அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். விசிகவின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி தனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா கடந்த சில மாதங்களாகவே, கூட்டணியில் இருக்கக் கூடிய திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து  வரும் நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய நடிகர் விஜயும் திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். இந்த சமயத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், மேடையில் பேசிய விஜய், இந்த விழாவில் திருமாவளவன் கலந்துகொள்வதை திமுக தடை செய்து விட்டது என ஓப்பனாக குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து பேசிய ஆதவும், விஜயை  வைத்துக் கொண்டே திமுகவை அட்டாக் செய்து பேசினார். இதற்கு, திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஏற்கனவே, ஆதவ் அர்ஜுனா மீது திமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர். இதையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என விசிகவுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில்தான் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகியுள்ளார். இவர் விரைவில்   தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கட்சியில் தனக்கு பெரிய பதவி தரப்பட வேண்டும் என விஜய்யிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.