டெல்லி:  தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மழை பெய்யும் என்றும், டிசம்பர் 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த ஒரு மாதமாக பல்வேறு காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவானதால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக  கனத்த மழை பெய்து வருகிறது. தற்போது கூட டெல்டா மாவட்டங்களில், தென் மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடி, கரையோ மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், தற்போது,  தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக  பெய்து வரும் நிலையில், இன்று  அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளதாகவும்,  அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது.

மேலு, இந்த  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.  இதன் காரணமாக வரும் 17 மற்றும் 18ந்தேதிகள்  தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக,   டெல்டா மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணாக,   அந்தமான், அதனை ஒட்டிய கடல்பகுதியில் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.