சென்னை
கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இன்று காலை 1,290 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது, அது 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
எனவே தொடர் கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆறு வடிநிலத்தில் உள்ள 336 ஏரிகளில் 62 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
மேலும் பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதால், சென்னை மணலி, புதுநகர், எண்ணூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 60 கிராம மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.