சென்னை
மறுதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தமிழக சட்டசபை கூட்டம் கூடி 2 நாட்கள் நடந்தது. இதில் முதல் நாளில் மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் எடுப்பதற்கான ஏல அனுமதியை எதிர்த்து தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது சட்டசபையில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடையே காரசார மோதல் ஏற்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். டங்ஸ்டன் ஏல அனுமதி, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு உள்ளிட்ட அம்சங்களில் ஏற்பட்ட கருத்து மோதல், சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
நேற்று பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். நேற்று முன் தினம் சட்டசபையில் 10 சட்ட மசோதாக்களும் நேற்று 9 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இவை நேற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கூடுதல் செலவினங்களுக்காக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் முன்மொழிந்தார். அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியதை தொடர்ந்து அவையை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.