திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மகாதீபம் ஏற்றப்படும் 13ந்தேதி அன்று  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4ந்தேதி கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், தினசரி  காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.   மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள்  நடைபெற்று வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்வுகளான இன்று தேரோட்டமும், வரும் 13ந்தேதி மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த ஆண்டு மலையில் மண்சரிவு நிகழ்வு ஏற்பட்டதால், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் திட்டமிட்டபடி மகாதீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில்,  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 21-ம் தேதி (சனிக்கிழமை) மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் வேலை நாளாக செயல்படும். மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது திருவண்ணாமலை காவல்துறை….