சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோரிக்கை எழுப்பினார். அருக்கு அமைச்சர் பதில் கூறினார்.
தமிழக சட்டசபையின் 2வது நாள் அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் முதல் நிகழ்வாக, மறைந்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை, திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசியவர், “கடந்த வாரம் பெய்த மழையால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முல்லை நகர் தனலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகரில் வெள்ளம் ஏற்பட்டது. . அதை அனைத்தையும் ஊடகங்களில் பார்த்திருப்போம்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அனுபவம் வாய்ந்தவர், எதை எடுத்தாலும் முழுமையாக செய்து முடிக்க கூடியவர், அரை குறையாக செய்யாதவர் என்பதை நாடு அறியும். ஆனால், என் தொகுதியில் வரதராஜபுரம் பகுதியில் அரைகுறையாக வேலை நடந்திருக்கிறது; முழுமையாக நடைபெறவில்லை. எனினும், முன்பு ஒரு காலத்தில் எல்லாம் மழை வந்தால் வெள்ளம் 10, 20 நாள்கள் தேங்கி நிற்கும். உங்களுடைய முயற்சியால் இப்போது ஒரே நாளில் வெள்ளம் வடிந்து விடுகிறது.
இருந்தாலும் நான் சொன்ன இடங்களில் திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரை இருக்கிறது. திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றினால் தான், தண்ணீர் தேங்காத பகுதியாக அதை பார்க்க முடியும். இதற்கு முன்பே அமைச்சர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் ஒரத்தூர் ஏரி, படப்பை ஏரி, திருமங்கலம் ஏரியை நீர்த்தேக்கமாக மாற்றினால் இப்பகுதிகளில் தண்ணீர் தேங்காது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என வாக்குறுதி அளித்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் இருப்பது போல், என் தொகுதியிலும் நெருக்கடி இருக்கிறது. அதன்படி, உத்திரவாதம் கொடுத்திருக்கிறேன். வரும் நிதிநிலை அறிக்கையில் எங்கள் நீர்வளத்துறை அமைச்சர் திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்றுவார் எனக் கருதுகிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது அவர் கையில் தான் இருக்கிறது. எனவே, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதை நிறைவேற்றி தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி அமர்ந்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “செல்வப்பெருந்தகை என்னிடம் நன்றாக மாட்டிக் கொண்டார். அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது என் கையில் தான் இருக்கிறது” எனக் கிண்டல் செய்யும் விதமாக கூறினார். இதைக் கேட்டு சட்டமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
திருப்புகழ் கமிட்டியானலும் சரி, திருவாசகம் கமிட்டியானாலும் சரி, நீங்கள் கூறியது எனக்கு தெரியும் என்ற அமைச்சர், இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மழைநீர் தேங்குவதாக சொல்லக்கூடிய பகுதிகளில் அரசு கவனம் செலுத்தும், உறுப்பினர் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.