சென்னை:  ஆயிரம் கைகள் மறைத்தாலும்...’  என்ற தலைப்பில், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா  தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.  அதில், மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று  தெரிவித்துள்ளார்.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற திமுகவின் கட்சி பாடலை மேற்கொள்காட்டி, ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவர் தொடர்பான நூல் ஒன்று வெளியிடப்பட்டது. ஆனந்த விகடன் மற்றும் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனமும் இணைந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை தயாரித்துள்ளனர். .இந்த, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்ற்றார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி உள்ளது

இந்த நூலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன், ஆதன் அர்ஜுனா உட்பட 36பேர் பங்காற்றியுள்ளனர். இந்த நூலை நடிகரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதலில் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பின்னர் அவர் திடீரென பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதற்கு திமுகவின் அழுத்தமே காரணம் என விமர்சிக்கப்பட்டது. மேலும் ஆனால், திருமாவோ,  விஜய்யுடன் ஒரே மேடையை பகிந்து கொண்டால் தேவையற்ற அரசியல் யூகங்களுக்கு வழி வகுக்கும் என்பதால் திருமாவளவன் இந்த விழாவை புறக்கணித்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு அரசியல், மன்னாராட்சி குறித்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விசிக முன்னாள் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுக தரப்பு மட்டுமின்றி, விசிக தரப்பிலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டரது. இதனால்,  விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., இடையே  விளவு ஏற்படும் என யூகிக்கப்பட்டது. ஆனால்,  விசிக தலைவர் திருமா இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்ததுடன், உடனே சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதையடுத்து ஆதவ் அர்ஜுனா சர்ச்சை முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தம் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து எக்ஸ் வலை தள பக்கத்தில் ஆதவ் அர்ஜூனா நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் என்ற தலைப்பிட்டு தமது பதிவை அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் கூறி உள்ளதாவது:

‘அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன்.

கட்சியின் பிரசார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.

தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச் செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

குறிப்பாக, ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன்.

கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.

கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அம்பேத்கர், ஈ.வே.ரா, அண்ணாதுரை ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம்.

எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை.

இவ்வாறு கூறி உள்ளார்.

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம்! திருமாவளவன் அறிவிப்பு…