சென்னை: தமிழ்நாட்டில் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற வன உயிரின வாரியக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்களைத் தேர்வு செய்தல், வன உயிரினங்களின் மேன்மை, அங்கு வாழக்கூடிய வன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியதுடன், வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தி, வன உயிரினப் பாதுகாப்புக்குக் குந்தகமின்றி செயல்படுத்துதல் போன்ற இதர இனங்கள் பற்றி விவாதித்தல், உரிய ஆலோசனைகளை பெற்று நடைமுறைக்கு கொண்டு வருதல், வன உயிரினப் பாதுகாப்பு தொடர்பாக வன வாரியம் முடிவு செய்யும் என்று கூறியிருந்தார்.
மேலும், இந்திய தேசிய பல்லுயிர் ஆணைய அறிக்கையின்படி தாவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள தாவரங்களின் வளமை என்பது இந்தியாவிலேயே முதன்மை யாக உள்ளது. இவை மட்டுமின்றி வன உயிரினங்களிலும் 5 புலிகள் காப்பகங்கள், 5 யானை காப்பகங்கள், 3 உயிர்க்கோளகக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள் என நமது மாநிலம் வன உயிரின வளமைமிக்க ஒரு மாநிலமாகத் திகழ்கிறது.