சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நாளை  புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நாளை (டிச.07) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது வரும் 12ம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக,   12,13ஆம் தேதிகளில் தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் (நவம்பர் இறுதியில்) வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் வட தமிழ்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் நாளை புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை வரும் 9ஆம் தேதி நெருங்கும் என்றும், அதன்பிறகு வரும் 12ஆம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.