சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவுக்கு அரசு பேருந்து ஓட்டுநரின் உதவிய மனித நேயம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஃபெங்கல் புயல் காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சென்னையில், மழைதண்ணீரில் சிக்கி பழுந்தடைந்து, இயக்க முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை கரைசேர்க்கும் விதமாக அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்து மூலம் ஆட்டோவை தள்ளியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பேருந்து டிரைவரின் மனிதநேயம் சமூக வலைதளங்களில் போற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மழைக்காலம் வந்தாலே சென்னை மக்கள், மழை வெள்ளத்தில் தத்தளிப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த ஆண்டும் பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையால் தண்ணீர் தேங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதுடன், மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றுவதற்கான தேவையான மோட்டார் பம்பு செட்டுகள், படகுகள், உடைந்து விழும் மரங்களை அகற்ற தேவையான உபகரங்களை 24 மணி நேரமும் தயாராக வைத்து, நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இருந்தாலும், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியாத நிலையே தொடர்கிறது.
இந்த நிலையில், நேற்று முதல் சென்னையில் பெய்து வரும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறது. ஒருபுறம் தண்ணீரை அகற்றும் பணியில் பல ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தாலும் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியாத நிலையே தொடர்கிறது. இதனால் சில சுரங்கப் பாலங்கள் மூட்ப்பட்டு உள்ளன. பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், திநகர் பனகல் சாலையில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க தயங்கி வந்த நிலையில், அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சர்ரென்று தண்ணீரில் வண்டியை செலுத்தினார். ஆனால், வண்டியின் எஞ்சினுக்குள் தண்ணீர் சென்றதால், வண்டிக பழுதாகி சாலையிலேயே நின்றது. அதை இயக்க ஓட்டுநர் எவ்வளவோ முயற்சித்தும், ஆட்டோ இயங்க மறுத்ததால், கொட்டும் மழையில் ஆட்டோ ஒட்டுநர் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னார் வந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு, ஆட்டோ ஓட்டுநரிடம் விவரம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவில் ஏறி அமரும்படி கூறிவிட்டு, பேருந்து மூலம் ஆட்டோவை மெதுவாக தள்ளிச்சென்றால். சிறிது துரம் சென்றதும், தண்ணீர் இல்லாத மேடான பகுதிவரை ஆட்டோவை பேருந்துமூலம் தள்ளிவிட்டு சென்றார்.
அரசுபேருந்து ஓட்டுநர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே அவ்வப்போத முட்டல் மோதல் நீடித்து வரும் நிலையில், மழைநீரில் சிக்கிய ஆட்டோவை மீட்க, அரசு பேருந்து ஓட்டுநர் முன்வந்த செயல் அவரது மனித நேயத்தை காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நன்றி: பாலிமர் டிவி